ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்கு தெரியாது. ஆனால் ஆசை இல்லையேல் வாழ்வதே வீண் என்று நினைக்கும் சராசரி மனிதன் நான். அதற்காக அந்த ஆசையை அடைந்தால் மட்டும் தான் சந்தோஷம் என்று நாம் வரையறை வகுக்க கூடாது. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அந்த ஆசையை அடைய முடியாமல் போகலாம் . அதற்கு வருந்த கூடாது என்றும் நான் சொல்ல வரவில்லை. சந்தோஷப்பட வேண்டிய நேரத்தில் சந்தோஷபடு, வருத்தபட வேண்டிய நேரத்தில் வருத்தபடு.
மிக பெரிய, நல்ல பெயருடைய, மற்றவர்களுக்கு உதாரணமாக விளங்க கூடிய தொழிலதிபராய் வர வேண்டும் என்பது என்னுடைய சிறிய ஆசை. இதை அடைந்தால் மட்டும் தான் நான் சந்தோஷமாய் இருப்பேன் என்று வரையறை வகுத்துக்கொள்ளவில்லை எனக்குள். என்னை பொறுத்தவரை ஆசை, சந்தோஷம் இவை இரண்டும் வேறு வேறு. அதற்காக ஆசையை அடைய முயற்சிக்க வேண்டாம் என்றும் நான் சொல்லவில்லை. இதை எழுதும் இந்த தருவாயிலும் நான் என் ஆசையை அடைய ஒரு முயற்சி எடுத்து கொண்டுதான் இருக்கிறேன். கிட்டதட்ட 7 வருடங்களாக முயற்சித்து கொண்டுதான் இருக்கிறேன், அதை அடையும் வரை. மாறாக நான் அதை அடைந்தால் தான் என் சந்தோஷம் என்று முடிவு எடுத்துவிட்டால் என் வாழ்கையில் இந்த 7 வருடங்களும் சந்தோஷம் இல்லாதவனாக போயிருக்கும். இன்னும் எத்தனை வருடம் அது தொடரும் என்று நினைத்தால் வாழ்கின்ற ஒவ்வொரு நாளும் மனநிறைவு இல்லாமல் போய்விடும்.
தாய் ஆசைபட்டால் குழந்தை வேண்டும் என்று, வலியுடன் தான் பெற்றெடுக்கிறார், என்றெல்லாம் கூறி "ஆசையே துன்பத்திற்கு காரணம் " என்ற கூற்றை பகிர்ந்தார் ஒரு நண்பர் என்னிடம். நான் கேட்கிறேன் "எந்த ஒரு ஆசையும் இல்லாமல் பிறக்கும் அந்த குழந்தை ஏன் அழுகின்றது ? , சந்தோஷத்தின் மிக உச்சம் எது? கண்டிப்பாக அது அழுகைதான். அதை நாம் ஆனந்த கண்ணீர் என்று அழைக்கின்றோம். இதற்கு உதாரணம் தேவைபடாது என்று நினைக்கின்றேன்.
நான் 10 ஆம் வகுப்பில் 400 க்கு மேல் எடுக்க வேண்டும் என்று ஆசைபட்டேன், ஆனால் நான் 391 தான் எடுத்தேன். 12 ஆம் வகுப்பில் 1000 க்கு மேல் எடுக்க வேண்டும், கணக்கில் 200 க்கு 200 எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் ஆசையெல்லாம் கிட்டத்தட்ட அந்த எல்லையை தொட்டுவிட்டது. 999-மதிப்பெண்ணும், கணக்கில் 199-மும் பெற்றேன். பொறியியலில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன், சுமாரான மதிப்பெண் எடுத்து பொறியியலும் முடித்தேன். அடுத்து நல்ல தொழிலதிபராய் வரவேண்டும் என்ற ஆசை தொடர்ந்தது...இன்னும்...
இப்படி என் ஆசைகள் ஒவ்வொரு வயதிலும் மாறிகொண்டுதான் இருந்தது. அதைவிட்டுவிட்டு இன்னும் அந்த 400-க்கு மேல் எடுக்கவில்லையே என்று நான் வருத்தப்பட்டு கொண்டு இருந்தால் என் வாழ்க்கை சந்தோஷமற்றதாய் போயிருக்கும். ஆசை படு, அதில் என்ன கஞ்சத்தனம் நமக்கு. பெரிய பெரிய ஆசைகள் என் மனதில் இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. அதனால் என் சிந்தனையும் மிக குறுகிய நிலையில் இல்லாமல் பரவியே கிடக்கின்றது. நான் நல்ல தொழிலதிபராய் வருவேன் என்ற நம்பிக்கை என் தன்னம்பிக்கையையும், என் பெற்றோர்களையும் விட என் நண்பர்களுக்கு தான் அதிகமாய் இருக்கிறது. கண்டிப்பாக வருவேன்.
ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்பார்கள். என்னை பொறுத்தவரை ஆசையும் இலட்சியமும் இல்லாதவன் மனிதனே இல்லை.
அந்த ஆசை அர்த்தமுள்ளதாய் இருத்தல் மிக நன்று. என்ன நடந்தாலும் நாம் வாழ்வின் அடுத்த நிலையை தேடி ஓடிக்கொண்டுதான் இருக்கிறோம். இது இயற்கை.
---------------சா. சக்திவேல்
No comments:
Post a Comment